ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, 20 நாட்களுக்கும் மேலாக அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. தகவல் தொடர்பு உள்ளிட்ட சின்னச்சின்ன அத்தியாவசியத் தேவைகளும் மறுக்கப்பட்டு வருகிறது. அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னொருபுறம், இது அத்திவாசியமான கட்டுப்பாடு என்று மத்திய அரசு விளக்கமளிக்கிறது.

இதற்கிடையே, கடந்த 21-ந்தேதி கண்ணன் கோபிநாதன் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லட்சக் கணக்கான மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். “என் ஒருவனின் ராஜினாமா இங்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், மக்களின் உணர்வுகளுக்கு நாம் பதில்சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்” என்று மட்டுமே தன் ராஜினாமா குறித்து கண்ணன் கோபிநாதன் அப்போது பேசியிருந்தார்.
இந்நிலையில், தனது ராஜினாமா முடிவு குறித்தும், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் மனம்திறந்திருக்கிறார். இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லையென்றால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அளித்திருக்கும் விளக்கத்தை, மறுத்துப் பேசியிருக்கும் கண்ணன் கோபிநாதன், “வாழ்க்கையும், சுதந்திரமும் ஒன்றாக கிடைக்கவேண்டும். சுதந்திரமற்ற வாழ்வு அர்த்தமற்ற வாழ்வாகும். அதை அர்த்தமுள்ளதாக ஆக்குவதை ஜனநாயகம் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தின் அழகு மிளிரும். உங்களது உயிரைக் காப்பதற்காக உங்களை ஜெயிலில் அடைப்போம் என்று அவர்கள் சொன்னால், ஏற்றுக் கொள்வீர்களா? அதுதான் கடந்த மூன்று வாரங்களாக காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது.
தனிப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டால்தான் இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டுமா? நான் கேட்கிறேன்… உங்கள் சொந்த நாட்டில் சுதந்திரம் மறுக்கப்பட்டு, மக்கள் யாவரும் மனதில் எண்ணங்கள் வெளிச்சொல்ல மறுக்கப்பட்டால், அது பாதிப்பை ஏற்படுத்தாதா?
ஜம்மு காஷ்மீர் மீது அரசியலமைப்பின் படி மாற்றங்களை ஏற்படுத்துவது அரசுக்கு இருக்கும் சட்டப்பூர்வ உரிமை. அதேபோல், அந்த முடிவுக்கு எதிர்வினை ஆற்றுவது ஜனநாயக நாட்டில் மக்களுக்கு இருக்கும் உரிமை. ஆனால், ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கு எதிராக மக்களை பேசவிடாமல் அடைத்து வைத்திருப்பது அரச வன்முறையின்றி வேறென்ன?” என்று கோபமாக கேள்வியெழுப்பி உள்ளார்.