Skip to main content

1921 முதல் 2023 வரை; வரலாற்றைப் பேசிய கனிமொழி எம்.பி. - ரசித்து கவனித்த உறுப்பினர்கள்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Kanimozhi MP spoke about history From 1921 to 2023

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு “நாரி சக்தி வந்தன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கி உள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் கனிமொழி கூறியதாவது, “மகளிர் இட ஒதுக்கீடு குறித்துப் பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் சில மசோதாக்கள் தான் அனைவராலும் ஆதரிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த மசோதாவை அனைவரும் ஆதரித்து துணை நிற்கிறோம் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், இந்த வாய்ப்பை கூட பா.ஜ.க அரசியலாகப் பயன்படுத்துகிறது என்பது மிகவும் கெடுவாய்ப்பாக இருக்கிறது.

 

பெண்களை மதிக்கிறோம், அவர்களின் சுதந்திரத்துக்காக பாடுபடுகிறோம் என்று ஆண்களின் பேச்சுகள் பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சி மட்டுமே என்று பெரியார் கூறியதை இங்கு நினைவுபடுத்துகிறேன். இங்கு பா.ஜ.க பேசுவதை பார்க்கும்போது பெரியார் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. ஜனநாயகம் என்பது பெண்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல. அதற்கு மாறாக அவர்கள் நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  1921 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தில் பெண்களுக்கான ஓட்டுரிமையை நீதிக்கட்சி முதன்முதலில் இந்தியாவில் கொண்டு வந்தது. அதேபோல், தமிழ்நாட்டில் 1927 ஆம் ஆண்டில் முதல் பெண் எம்.எல்.ஏவாக முத்துலெட்சுமி ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் தேவதாசி முறையை அடியோடு ஒழித்தவர்.

 

ஆனால், 100 வருடங்கள் கடந்த பின்னும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை இன்னும் நிறைவேற்றவில்லை. 1929 ஆம் ஆண்டில், சுயமரியாதை நிகழ்ச்சியில் பெரியார் கலந்து கொண்டு பேசும்போது, பெண்களுக்கான படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசியிருந்தார்.

 

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முதல்முறையாக 1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு அப்போது மத்தியில் ஆட்சி செய்த பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு இந்த மசோதாவை அப்போது கொண்டு வந்தது. அதன் பிறகு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஐக்கிய முற்போக்கு அரசால் 2010 ஆம் ஆண்டு இந்த மசோதாவை ராஜ்ய சபாவில் கொண்டுவரப்பட்டது. 13 வருடங்களுக்கு முன் ராஜ்ய சபாவில் இந்த மசோதா குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பை பெற்றேன். மீண்டும், இன்று இந்த மசோதாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். 13 வருடங்களாக நாம் இது குறித்துப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம்.

 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. பல்வேறு தலைவர்கள் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு பல முயற்சிகள் எடுத்து வந்தனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு 2014 ஆம் ஆண்டில் இந்த மசோதாவை நிறைவேற்றுமாறு பிரதமருக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கடிதம் எழுதினார். அதேபோல், 2017 ஆம் ஆண்டும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இதை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினார். மீண்டும், 2017 ஆம் ஆண்டில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் டெல்லியில் நாங்கள் பேரணி நடத்தினோம்.

 

நானும், இந்த மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். அப்போதெல்லாம், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் இந்த மசோதா கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க உறுதியாக கூறியது. ஆனால், தற்போது எத்தகைய ஒருமித்த கருத்து ஏற்பட்டுவிட்டது என்பதை நான் அறிய விரும்புகிறேன். இது தொடர்பாக எந்தவித விவாதமும் இதுவரை நடக்கவில்லை. இந்த மசோதா பா.ஜ.க ரகசியமாகக் கொண்டு வந்திருக்கிறது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அனைத்து கட்சிக் கூட்டத்தின் போது கூட இதுகுறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எங்கள் முன் உள்ள கணினியில் திடீரென இது குறித்து தகவல் வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சீருடை ரகசியமாக மாற்றப்பட்டதை போல் இந்த மசோதாவும் ரகசியமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

எனினும், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது மனம் முழுமையாக மகிழ்ச்சி அடைந்தது.  ‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ என்ற பாரதியார் பாடல் தான் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எனது மனதுக்குள் பாடியது. கோடான கோடி சகோதரிகள் போல் நானும் இந்த மசோதா எப்போது அமல்படுத்தப்படும் என்று காத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால், மத்திய அரசோ இந்த மசோதா அமல்படுத்தப்படும் வரை காத்துக்கொண்டிருங்கள் என்று கூறுகிறார்கள்.

 

இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. 2010 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு ஆட்சியில், இந்த மசோதா கொண்டுவரப்பட்ட போது எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆனால், மக்கள் கணக்கெடுப்புக்குப் பின் தான் இந்த மசோதா அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. இன்றைக்கு கூட இந்த மசோதா குறித்து, ‘இந்தியாவில் மட்டும் தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்று தெரியாமல் இருக்கிறது. தமிழ்நாட்டின் மீது, தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்பு மிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

 

இந்த மசோதாவை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க கொண்டு வந்திருப்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மசோதவை தொகுதி மறுவரையறையோடு ஏன் தொடர்புப்படுத்தி இருக்கிறீர்கள்? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் போது, தென்னிந்தியாவின் குறிப்பாகத் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு தான் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றால் அது எப்போது நடக்கும்?

 

நாடாளுமன்றத்தில் பெண்களின் கருத்துகளை கேட்காமல் ஒவ்வொரு வருடமும், சராசரியாக 40 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெண்கள் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் 141 நாடாக இந்தியா இருக்கிறது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், நாடுகளின் நாடாளுமன்றங்களில் உள்ள பெண்கள் பிரதிநிதித்துவத்தைவிட நமது நாட்டின் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. இன்னும் எத்தனை காலம் தான், இந்த மசோதாவை நிறைவேற்றுவீர்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறது?

 

இந்த மசோதா பெண்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஆண், பெண்களின் குணம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களைக் கடவுளாக ஏற்கிறீர்கள். அதுவே, ஒரு பெண் தனது தைரியத்தை வெளிப்படுத்தினால் அதை ஏற்க மறுக்கிறது. மேலும், அவர்கள் அரக்கக் குணம் கொண்டவர்களாக தான் ஏற்கிறது. இந்து மதத்தின் மீது பா.ஜ.க மிகுந்த நம்பிக்கை கொண்ட கட்சி. உங்களிடம் நான் கேட்கிறேன். காளி தைரியமான தெய்வம் இல்லையா? பின்னர் அவர்களை அவமதிப்பதற்கு நீங்கள் யார்? ஏன் பெண்கள் தைரியமானவர்களாக இருக்கக்கூடாது?.

 

பெண்கள் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக போராடவில்லையா? நமது நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தைரியமானவராக இருக்கவில்லையா? ஏன் மாயாவதி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பெண் தலைவர்கள் தைரியமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கவில்லையா?” என்று பேசினார். அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஜெயலலிதா.. ஜெயலலிதா” என்று குரல் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி. “ஆம் ஜெயலலிதாவும் துணிச்சல் மிக்க பெண் தலைவர் தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எங்களுக்கு வழிபாடு தேவையில்லை. இது பெண்களுக்கான உரிமை. ஆண்களுக்கு சமமாகப் பெண்கள் நடத்தப்பட வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆண்களைப் போலவே எங்களுக்கு உரிமை இருக்கிறது” என்று பேசினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

The central government has called for an all-party meeting 

 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 15 நாட்கள் நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 4 ஆம் தேதி (04.12.2023) தொடங்க உள்ள நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி (02.12.2023) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனர். இதனையொட்டி அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

 

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதால், இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மன்சூர் அலிகான் விவகாரம் குறித்து கனிமொழி எம்.பி கருத்து

 

kanimozhi mp about mansoor ali khan trisha issue

 

1990 மற்றும் 2000களில் வில்லனாக பிரபலமடைந்த மன்சூர் அலிகான், அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

இதையடுத்து அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். 

 

இதனைத் தொடர்ந்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம், “நடிகைகளை பற்றி அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. 

 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை. என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் இந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார்.  இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தது.

 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “பெண்களை தவறாக இழிவாக பேசக்கூடிய உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிலளித்தார்.