Skip to main content

1947இல் கிடைத்தது பிச்சை; உண்மையான சுதந்திரம் 2014இல் கிடைத்தது - கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்து!

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

kangana ranaut

 

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத். தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்துவரும் இவர், தற்போது இந்திய சுதந்திரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.

 

ஆங்கில ஊடகம் ஒன்றின் ஆண்டு கூட்டத்தில் பேசிய கங்கனா ரணாவத், காங்கிரஸை பிரிட்டிஷாரின் நீட்சி என தெரிவித்தார். தொடர்ந்து இந்திய சுதந்திரத்தைப் பற்றி பேசிய அவர், "அப்போது பெற்றது பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ஆம் ஆண்டு கிடைத்தது" என கூறினார்.

 

கங்கனாவின் இந்தக் கருத்துக்கு கண்டங்கள் குவிந்துவருகின்றன. அதேபோல் பாஜக எம்.பி. வருண் காந்தியும் கங்கனா ரணாவத்தின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாத்மா காந்தியின் தியாகத்தை சில சமயம் அவமதிக்கிறார். சில சமயம் அவரைக் கொன்றவரைப் புகழ்கிறார். இப்போது மங்கள் பாண்டே, ராணி லக்ஷ்மிபாய், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தின் மீது வெறுப்பை உமிழ்கிறார். இதைப் பைத்தியக்காரத்தனம் என சொல்வதா அல்லது தேசத்துரோகம் என சொல்வதா?"  என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.