
மும்பை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை தொடங்க உள்ள நிலையில், நேற்று முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து மாலை 5 மணி ஆனதும் நீதிபதிகள் தங்கள் பணியை முடித்துக்கொண்டு புறப்பட்டனர். ஆனால், நீதிபதி ஷாருக் காதவாலா மட்டும் பணி நேரம் முடிந்த பின்னரும், நீதிமன்றத்தில் இருந்தார். அவர், தனது அமர்வு விசாரிக்க உள்ள எல்லா வழக்குகளையும் விடிய விடிய விசாரித்து இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதிகாலை 3.30 மணிக்கு மேலும், 100க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் எல்லாவற்றையும் விசாரித்து அவர் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளார். அதிகாலை வரை அவரது அமர்வில் இருந்த கோர்ட் பணியாளர்களும் தங்களது பணியை மேற்கொண்டுள்ளனர்.
நீதிபதி காதவாலாவுக்கு இது புதியது அல்ல. அவர், இதற்கு முன்னர் பலமுறை நள்ளிரவு வரையிலும், நள்ளிரவை தாண்டியும் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.