Skip to main content

'சாலைக்காக கொன்று குவிக்கப்பட்ட பறவைகள்...'- வைரல் வீடியோவால் ஜேசிபி டிரைவர் கைது!

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

JCB driver arrested by birds viral video!

 

பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்த மரத்தினை ஜேசிபி இயந்திரம் கொண்டு சாய்த்தபொழுது அதிலிருந்த பறவைகள் மரத்தோடு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில் மரத்தினை வெட்டிய ஜேசிபி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கேரள மாநிலம் மலப்புரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் தலப்பாறை, வி.கே.பாடியில் உள்ள மரம் ஒன்றில் பறவைகள் அதிகமாக வசித்து வந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு மரத்தை அகற்றும்பணி நடைபெற்றது. அப்பொழுது 'சடார்' என்று மரம் கீழே விழ, மரத்தில் தங்கி இருந்த பறவைகள் 'பட பட' வென பறந்து சென்றன. இருப்பினும் பல பறவைகள் பறக்க முடியாமல் மரத்துடன் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தன. சாலையிலேயே பறவைகள் குவியல் குவியலாக இறந்து கிடக்கும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் அந்த மரத்தினை வெட்டிய ஒப்பந்ததாரர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மரத்தை வெட்டி அகற்றிய ஜேசிபி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜேசிபி வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.