நாடாளுமன்ற கூட்டத்தில் மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப்பிரிவு 370- வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை. 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கல்லெறியும் சம்பவங்கள் குறைந்துளளன. 370- வது பிரிவை நீக்கினால் ரத்தம் பெருக்கெடுக்கும் என கூறிய நிலையில் அப்படிப்பட்ட சூழல் இல்லை. தொலைபேசி இணைப்புகள் செயல்படுகின்றன. இண்டெர்நெட் வசதியும் மீண்டும் அளிக்கப்படுகிறது என்று கூறினார்.
ஜம்மு- காஷ்மீரில் 370- வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு முன் கைதான 5,161 பேரில் 609 பேர் மட்டுமே சிறையில் உள்ளனர். கைதான பிரிவினைவாதிகள், சில அரசியல் தலைவர்கள், போராட்டக்காரர்களில் 4,552 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 5ல் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்.
அசாம் மாநிலத்தை போல் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) முறை அமல்படுத்தப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார். சாதி, மத பேதம் பார்க்காமல் அனைவரையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்க்ள தீர்ப்பாயத்திற்கு செல்ல உரிமையுள்ளது என்றார்.