ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, மத்திய பிரதேசத்தில் இருந்து சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றை பகிர்ந்து கடுமையாக பதிலளித்துள்ளார்.
இஸ்திஜா முப்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், 16 வயது சிறுவன் ஒருவன், மூன்று சிறுவர்களை செருப்பால் பலமுறை அடித்து, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கோஷமிடும்படி வற்புறுத்தி கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரட்லமில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீடியோ பகிர்ந்த இல்திஜா முப்தி, ‘கடவுள் ராமர் வெட்கத்தால் தலையைத் தொங்கப் பார்க்க வேண்டும். முஸ்லீம் சிறுவர்கள், அவரது பெயரை உச்சரிக்க மறுப்பதால் மட்டுமே அவர்களைச் செருப்பால் அடிப்பதை பார்க்க வேண்டும். இந்துத்துவா என்பது மில்லியன் கணக்கான இந்தியர்களை பாதித்து, கடவுளின் பெயரைக் கெடுக்கும் ஒரு நோயாகும்’ என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இல்திஜா முப்தி, “இது மிகவும் கவலையளிக்கிறது, இந்த மனிதன், முஸ்லீம் சிறுவர்களை செருப்பை கொண்டு இடைவிடாமல் அடிக்கிறார். இன்று, என்னில் ஒரு பகுதியினர் மிகவும் கோபமாக உணர்ந்தார்கள். அதனால் நான் ட்வீட் செய்ய வேண்டியிருந்தது. நீங்கள் முஸ்லீம்களை அடித்து, நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நான் ஏன் அப்படி இருக்க வேண்டும்?. நான் ராமரை அழைத்ததற்குக் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக முஸ்லிம்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டதே. ராமரின் நாமத்தை ஜபிக்கும்படி வற்புறுத்தி குழந்தைகள் அடிக்கப்பட்டுள்ளனர். இது ராமராஜ்ஜியம் என்று எப்பொழுதும் சொன்னார்கள் அல்லவா? குழந்தைகளின் பெயரைச் சொல்ல மறுத்ததற்காக நீங்கள் அவர்களை அடிப்பது என்ன வகையான ராமராஜ்யம்?
இந்துக்கள் பெரும்பாலும் வெறி பிடித்தவர்களாக மாறிவிட்டனர், இது ஒரு நோய். ஒரு முஸ்லிமாக, நான் புரிந்துகொள்கிறேன். ஏனென்றால் பயங்கரவாதிகள் கூட இஸ்லாத்தின் பெயரால் வன்முறை செய்ய ‘அல்லாஹ் உ அக்பர்’ பயன்படுத்தினார்கள். இஸ்லாம் மதம் கெட்டுப் போனது போல் இப்போது இந்துக்களும் களங்கப்படுத்தப்படுகிறார்கள்” என்று கடுமையாக பேசினார்.