ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் மசோதா, காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது மத்திய அரசு. இந்த மசோதாக்களுக்கான ஒப்புதலை குடியரசுத்தலைவர் அளித்துள்ள நிலையில், காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31 முதல் தனித்தனி யூனியன்களாக செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் முடிவை அடுத்து, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவப்படை வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். அதே போல் இணையதள சேவை, தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகும், அந்த மாநிலத்தில் தொடர்ந்து அமைதி நிலவி வருகிறது. இதனால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியுள்ளனர். ஜம்முவில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.
ஜம்மு- காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், அங்குள்ள நிலவரத்தை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். மேலும் காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். அப்போது மக்களுடன் சகஜமாக பேசியும், அவர்களுடன் உண்வு அருந்தியும் மாநிலத்தில் நிலவும் சூழலை அவ்வப்போது மத்திய அரசுக்கு தகவல் அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் பகுதிக்குச் சென்றார். அங்கு ஈத் பண்டிகை வருவதை முன்னிட்டு கால்நடை வணிகர்கள் மற்றும் உள்ளூர் மக்களைச் சந்தித்து, அவர் உற்சாகமாகப் பேசும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பின்னர் அவர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த (சிஆர்பிஎஃப்) பணியாளர்களுடன் பேசினார். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர்கள் செய்த அற்புதமான பணிகளுக்கு அஜித் தோவல் நன்றி தெரிவித்தார்.
ANANTNAG: National Security Advisor Ajit Doval interacts with locals in Anantnag, an area which has been a hotbed of terrorist activities in the past. #JammuAndKashmir pic.twitter.com/dUd7GPvS2W
— ANI (@ANI) August 10, 2019