
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் “இந்தியா வழி: நிச்சயமற்ற உலகத்திற்கான உத்திகள்” என்ற புத்தகத்தில் இந்தியாவின் பல அரசியல் விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை, பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து அவர் இதில் பேசியுள்ளார்.
2008 உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து 2020 கரோனா வைரஸ் தொற்றுநோய் வரையிலான காலகட்டத்தில், உலகில் நடந்த மாற்றங்கள் மற்றும் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் அவற்றிற்கான சாத்தியமான கொள்கை பதில்களை இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில், "இந்தியாவின் சர்வதேச அளவிலான செல்வாக்கை மூன்று முக்கியமான கொள்கைகள் தடுத்தன. ஒன்று 1947 பிரிவினை, இது மக்கள்தொகை மற்றும் அரசியல் ரீதியாகத் தேசத்தைப் பின்னுக்குத் தள்ளியது. மற்றொன்று, சீனாவுக்குப் பிறகு ஒன்றரை தசாப்தங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தாமதமான பொருளாதார சீர்திருத்தங்கள்.
இந்த 15 ஆண்டுகால இடைவெளி இந்தியாவைப் பெரும் பாதகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மூன்றாவது, அணுசக்தி கொள்கைகளில் நீண்டகால யோசனை ஆகியவை ஆகும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த அவர், "தற்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரி இந்தியாவிடம் பலரும் உதவி கோருகின்றனர். இனியும் யாரோ ஒருவரைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்தியாவும் தனது பங்களிப்பை அளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாதம், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும் களத்தில் இறங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.