தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தக்கத்தில், குஜராத் கலவரம் பற்றியும், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்தும், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் நடந்த கலவரம் குறித்த பாடத்தில் முன்பு இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்று இருந்ததைப் பல சமூகத்தைச் சேர்ந்த பலரும் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.
அதே போல், பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நடந்த மதக்கலவரம், உ.பியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற பல தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும், அதை அனைத்து சமூகத்தால் கொண்டாடப்பட்டது என்றும் கருத்தொற்றுமையைக் கட்டி எழுதியதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த தீர்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய திருத்தங்கள் கடும் சர்ச்சையாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீட் 2024 இல் வழங்கப்பட்ட கருணை அடிப்படையிலான மதிப்பெண்களுக்கு என்.சி.இ.ஆர்.டி மீது தேசிய தேர்வு முகமை குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் தன் மீதான மோசமான தோல்விகளில் இருந்து என்.டி.ஏ மடை மாற்றுகிறது.
இருப்பினும் என்.சி.இ.ஆர்.டி 2014 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட 11 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் மதச்சார்பின்மையை விமர்சிக்கிறது. இது சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் கொள்கைகளை விமர்சித்துள்ளது என்றே சொல்லலாம். என்.சி.இ.ஆர்.டியின் நோக்கம் என்.சி.இ.ஆர்.டியின் நோக்கம் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதே தவிர அரசியல் துண்டு பிரசுரங்கள் தயாரிப்பது அல்ல.
இந்தியக் குடியரசின் அடித்தளத் தூணாக மதச்சார்பின்மை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது என்.சி.இ.ஆர்.டி தாக்குதல் நடத்தி வருகிறது. பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் இன்றியமையாதப் பகுதியாக இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது நாக்பூர் அல்லது கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான நரேந்திர கவுன்சில் அல்ல, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் என்பதை என்.சி.இ.ஆர்.டி தனக்குத்தானே நினைவூட்ட வேண்டும். பள்ளியில் என்னை வடிவமைத்த என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களும் இப்போது சந்தேகத்திற்குரிய தரத்தில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.