Skip to main content

நீட் வினாத்தாளை கசியவிட்டு முறைகேடு - மாணவி உட்பட 8 பேர் கைது!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

neet

 

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுகிழமை (12.09.2021) நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னரே நீட் தேர்வு வினாத்தாள் வெளியாகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தது. இந்தநிலையில் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக நீட் தேர்வு எழுதிய மாணவி, அவரது மாமா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவர்களுக்கு சிலர் உதவப்போவதாகவும், ஒரு மாணவருக்கு உதவ ஒரு கும்பல் 35 லட்சம் கேட்பதாகவும் ராஜஸ்தான் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

 

இதனையடுத்து ராஜஸ்தான் காவல்துறையினர், நீட் தேர்வு மையத்தில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதில், தேர்வு அறை கண்காணிப்பாளர் ராம் சிங், தேர்வு மைய நிர்வாக பிரிவின் பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் நீட் வினாத்தாளை புகைப்படம் எடுத்து வெளியாட்களுக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து பதில்களைப் பெற்று தனேஸ்வரி யாதவ் என்ற மாணவிக்கு உதவியது தெரியவந்தது.

 

இதனையடுத்து மாணவி தனேஸ்வரி யாதவ், முறைகேட்டிற்கு ஏற்பாடு செய்த மாணவியின் மாமா சுனில் குமார் யாதவ், தேர்வு அறை கண்காணிப்பாளர் ராம் சிங், தேர்வு மைய நிர்வாக பிரிவின் பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய தனியார் பயிற்சி மைய உரிமையாளர் நவரதன் சுவாமி, வினாக்களுக்கு விடையைத் தயார் செய்த அனில் யாதவ் மற்றும் சந்தீப், விடைகளை தேர்வு அறை கண்காணிப்பாளர் ராம் சிங்கிற்கு அனுப்பிய பங்கஜ் யாதவ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.