ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அம்மாநில அரசு அமைத்தது.
கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்ட லட்டு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் ஒரு முதல்வர், எதற்காக எடுத்த உடனேயே இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளிக்கு கொண்டு சென்றார்?. இது சம்பந்தமான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வந்த ஆய்வறிக்கையை, செப்டம்பர் மாதத்தில் ஊடகங்களில் முன்பு தெரிவித்தது ஏன்? இதற்கான உள்நோக்கம் என்ன?.
லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களில் ஆய்வறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை ஊடகங்களுக்குச் சென்று இந்த சொல்ல வேண்டிய அவசியம் என்ன?. கலப்படமான நெய் பயன்படுத்தப்படவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தனது அறிக்கையில் தெளிவுப்படுத்திருக்கிறார்கள். அதனை ஆய்வு செய்வதற்கு முன்பாக, தானாகவே ஒரு முடிவிற்கு எப்படி வந்தீர்கள்? என்று உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க மத்திய, மாநில அதிகாரிகள் அடங்கிய புதிய சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “சந்திரபாபு நாயுடுவின் உண்மை முகத்தை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, ஆதாரமற்ற கூற்றுக்களை கூறி, பொதுமக்களின் கோபத்தை கிளற முயன்றார். சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் பக்தி இருந்தால், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரபாபு நாயுடு அரசியலை மதத்துடன் கலக்கக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பல ஊடகங்கள் எப்படிச் செய்தியாக்கின என்பதை நாம் பார்த்திருக்கிறோம். முறையான ஒப்புதல் அல்லது ஆதாரம் இல்லாமல், இதுபோன்ற வதந்திகளை பரப்பியிருக்கக் கூடாது. ஆதாரமில்லாமல் மதச் சடங்குகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை யாரும் கூறக்கூடாது” என்று கூறினார்.