அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, மின்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, கவுதம் அதானி சந்தித்துப் பேசியதாக அமரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. அதாவது, மத்திய அரசால் நடத்தப்படும் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாநிலத்தின் தயக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக ஆகஸ்ட் 2021 இல் அப்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கவுதம் அதானி சந்தித்ததாக அமெரிக்கா செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) குற்றச்சாட்டு வைத்ததாக தகவல் வெளியானது. இந்த தகவல் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், அதானி லஞ்ச விவகாரத்தில் தனது பெயரஒ அமெரிக்க நீதிமன்றம் குறிப்பிடவே இல்லை என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நேற்று (28-11-24) குண்டூர் மாவட்டம், தாடேப்பள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், யாரும் எனக்கு ஊக்கத்தொகையை வழங்க முடியாது. தயவு செய்து அமெரிக்காவில் உள்ள நபர்கள் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்க்கவும். லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் செவிவழிக் கதை தான். ஜெகனோ அல்லது யாரோ லஞ்சம் வாங்கியதாக யாரும் கூறவில்லை.
மாநில முதல்வராக பல தொழிலதிபர்களை சாதாரண நடைமுறை தான். எந்த ஒரு மாநிலமும் தொழில்களை கொண்டு வர தொழிலதிபர்களை சந்திக்கிறது. முதலமைச்சராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அதானியை சில முறை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சியின் ஊடக முகங்களாக செயல்படும் இந்த தீங்கிழைக்கும் அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்புவோம். எனது கவுரவத்தை கெடுக்கும் வகையில் பொய்களை மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றனர்” என்று கூறினார்.