ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உருவாக்க உலக நாடுகள் அனைத்தும் முயன்று கொண்டிருக்கையில் ஜெர்மனி ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் தொடர்வண்டியையும், இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்தையும் வடிவமைத்து அசத்தியுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங், இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்தை CSIR மற்றும் KPIR நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பேருந்து மற்ற பேருந்துகளை விட குறைவான அளவே கரியமிலவாயு வெளியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் உள்ள லோவர் சாக்ஸோனி நகரில் டீசலில் இயங்கும் 15 ரயில்களுக்கு மாற்றாக 14 ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மாநில ஆளுநர் ஸ்டீபன் வெய்ல் 15 மில்லியன் டாலர்கள் பொருட்செலவில் உருவான இந்த திட்டம் லோவர் சாக்ஸோனி நகரின் பொருளாதாரத்தை பசுமையாக்க ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனவும் வருங்காலத்தில் ஹைட்ரஜன் ரயில்கள் ஜெர்மனியில் அதிக அளவில் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இந்த ரயிலை தயாரித்த அல்ஸ்டாம் நிறுவனம் இந்த ரயில்கள் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மேலும் ஹைட்ரஜன் எரிபொருளை உபயோகிப்பதால் வருடத்திற்கு 1.6 மில்லியன் லிட்டர் டீசல் சேமிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.