ISRO informs that there is oxygen in the moon

Advertisment

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்த போது, பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரோ கடந்த 27 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோவரில் உள்ள Laser- Induced Breakdown Spectroscope (LIBS) என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்து சரித்திர சாதனை படைத்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலவின் தென் பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும், இது தவிர நிலவில் ஆக்சிஜன் இருப்பதாகவும் கண்டறிந்த ரோவர், தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தனது தேடுதல் வேட்டையைத்தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் லிப்ஸ் (LIPS) என்ற கருவி பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.