உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டும் இரோம் ஷர்மிளா இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்து, தாயாகி இருக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தான் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து இரோம் ஷர்மிளா 16 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அவர் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றாண்டு தனது போராட்டத்தை முடித்துக் கொண்ட ஷர்மிளா, தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
அதன்பிறகு பொதுவாழ்வு, போராட்டங்களில் இருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக் கொண்ட ஷர்மிளா, பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற தனது நீண்டகால நண்பரும், காதலருமான டெஸ்மோண்ட் கொட்டின்ஹோவைக் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் தமிழகத்தின் கொடைக்கானலில் நடைபெற்றது. அவர்கள் இருவரும் கொடைக்கானலிலேயே அமைதியாக வசித்துவந்தனர்.
இந்நிலையில், கர்ப்பமடைந்த இரோம் ஷர்மிளா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள க்ளவுட் நைன் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்னையர் தினமான நேற்று காலை 9.21 மணிக்கு ஷர்மிளாவிற்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளுக்கு நிக்ஸ் சகி மற்றும் ஆட்டம்ன் தாரா என பெயரிட்டுள்ளனர் ஷர்மிளா - டெஸ்மோண்ட் தம்பதியினர். இதுபற்றி பேசியிருக்கும் ஷர்மிளா, “இது புதிய வாழ்வு. எனக்கு புதிய தொடக்கம். மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கோ... டெஸ்மோண்ட்டுக்கோ இந்தக் குழந்தைதான் வேண்டும் என்கிற தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் இல்லை. குழந்தை நலமுடன் பிறந்தாலே போதும் என்றே நினைத்திருந்தோம்” என தெரிவித்திருக்கிறார்.