கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஐஃபோன் உற்பத்தித் தொழிற்சாலை விஸ்ட்ரான். தைவான் நாட்டைச் சார்ந்த இந்த நிறுவனம், கடந்த சில மாதங்களாக, தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை.
தொழிற்சங்கங்கள், மூலம் சம்பளம் தரக்கோரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், அது பயனளிக்காததால், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென தொழிலாளர்கள், அத்தொழிற்சாலையை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். விஸ்ட்ரான் தொழிற்சாலையில் இருந்த, கணினிகள், வாகனங்கள், கண்ணாடிகள் என அனைத்தும் தொழிலாளர்களால் நொறுக்கப்பட்டது.
இந்தநிலையில், தொழிற்சாலையில் ஏற்பட்ட வன்முறை குறித்து போலீஸில் புகாரளித்துள்ள விஸ்ட்ரான், இந்த வன்முறையால், தங்களுக்கு 437 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், வன்முறையின் போது ஆயிரக்கணக்கான ஐஃபோன்கள் திருடப்பட்டதே இந்த நஷ்டத்திற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், விஸ்ட்ரான் தொழிற்சாலையில் நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பர், விஸ்ட்ரான் தொழிற்சாலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறியுள்ளார். மேலும், விஸ்ட்ரான் நிறுவனம், கான்ட்ராக்டர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு எடுத்துள்ளது. அந்த தொழிற்சாலை, கான்ட்ராக்டர்களிடம் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பளத்தைத் தந்து விட்டதாகவும், கான்ட்ராக்டர்கள் சம்பளத்தைத் தொழிலாளர்களுக்கு கொடுக்க தாமதப்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளது. இது பற்றி விசாரித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
மேலும், மூன்று நாட்களில் தொழிலாளர்களுக்கு அனைத்து நிலுவைத் தொகையையும் தந்துவிட வேண்டுமென்று, தொழிலாளர் நலத்துறை விஸ்ட்ரான் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாவும் சிவராம் ஹெப்பர் தெரிவித்துள்ளார்.