Skip to main content

தெலங்கானாவிலும் காலை உணவுத்திட்டம் அறிமுகம்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Introduction of breakfast scheme in Telangana also
கோப்புப்படம்

 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அரசு பள்ளிகளில் பயிலும்1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவுபடுத்தினார்.

 

இத்திட்டத்தை தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் இது போன்ற திட்டத்தை செயல்படுத்த தெலங்கானா மாநில அரசு ஆர்வம் தெரிவித்திருந்தது. அதற்காக தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டு தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் வந்து பார்வையிட அம்மாநில உயர் அலுவலர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தெலங்கானா மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் முதலமைச்சரின் தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட தெலங்கானாவிலிருந்து மூத்த அரசு அதிகாரிகள் கடந்த 30 ஆம் தேதி சென்னை வந்திருந்தனர்.

 

அப்போது திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் கண்ட தெலங்கானா மாநிலத்தின் அரசு அதிகாரிகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை பற்றியும் அது செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் கூறுகையில் “இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தெலங்கானா மாநில அரசு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 10 பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தசரா பரிசாக இத்திட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Telangana DGP suspended; The Election Commission is in action

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 63 இடங்களையும், பிஆர்எஸ் 40 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், பிற கட்சியினர் 8 இடங்களையும் பிடித்துள்ளனர்.

 

இந்த சூழலில் தெலங்கானா மாநில போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமார், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன்பாகவே தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டியை சந்தித்தாகக் கூறி தெலங்கானா போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமாரை சஸ்பெண்ட் செய்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘மிக்ஜாம்’ புயல்; தனியார் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Mikjam Storm; Tamil Nadu Government Important Instructions to Private Companies

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக் கடலில், புதுச்சேரியிலிருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையிலிருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரிலிருந்து 330 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளைத் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம்மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்