இந்தியாவில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு வகையான உணவு வகைகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் வட இந்தியாவில், பருப்பு, கோதுமை சார்ந்த ரொட்டி உள்ள பிரதான உணவுகளை மக்கள் உண்கின்றனர். தென் இந்தியாவை பொறுத்தவரை, சாதம், இட்லி, தோசை, சாம்பார், சட்னி, காரவகை உணவுகள் உள்ளிட்ட உணவுகளை மக்கள் உண்கின்றனர்.
இந்த நிலையில், உலகிலேயே இந்தியாவின் உணவுத் தட்டு தான் மிகவும் பசுமையானது என்று சர்வதேச அமைப்பு ஒன்று ஆய்வை வெளியிட்டுள்ளது. சர்வதேச அமைப்பான, ‘லிவ்விங் ப்ளேனட்’ இந்திய உணவுகள் குறித்து ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜி20 நாடுகளில், இந்தியாவின் உணவு நுகர்வு முறை மிகவும் நிலையானது. உலக நாடுகள், இந்தியாவின் உணவு முறையைப் பின்பற்றினால் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து குறைக்க வழிவகுக்கும். மேலும், 2050ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தணிக்க உதவும்.
இந்தியாவுக்கு அடுத்த தரவரிசையில், இந்தோனேஷியா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள், சுற்றுச்சூழலுக்கு நிலையான உணவு முறைகளை கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்கா, அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குறைந்த நிலையான உணவு நுகர்வு நடைமுறைகள் உள்ளன. 2050 ஆம் ஆண்டளவில் தற்போதைய உணவு நுகர்வு முறைகளை உலகில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டால், உணவு தொடர்பான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கான 1.5 ° செல்சியஸ் காலநிலை இலக்கை, 263 சதவிகிதத்தை தாண்டிவிடுவோம். இதனால், நமக்கு ஆதரவளிக்க ஒன்று முதல் ஏழு பூமிகள் தேவைப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.