உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மதக் கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்கத் தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 21 ஆம் தேதி ஐந்து பெண்களின் மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்தது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தொல்லியல் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்தத் தடையும் இதனால் ஏற்படக் கூடாது என மசூதி முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. அறிவியல் ஆய்வறிக்கையை வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார்.
உத்தரவின் படி தொல்லியல் ஆய்வுத் துறையினர் இன்று காலை மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தொடங்கினர். இந்நிலையில் ஞானவாபி மசூதி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாளை மறுநாள் மாலை 5 மணி வரை மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் முறையிட்டுக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.