இந்திய காப்பீட்டுத்துறையில் 49 சதவீதம் வரை அந்நிய முதலீடு செய்யலாம் என்ற நிலை இருந்து வந்தது. இந்தநிலையில், காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை 74 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், காப்பீட்டு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து கடந்த வாரம் மாநிலங்களவையில் நிறைவேற்றியது.
இதனைத்தொடர்ந்து இந்த காப்பீடு (திருத்த) மசோதா, மக்களவையில் இன்று நிறைவேறியது. இதன்மூலம் காப்பீட்டு துறையில் 74 சதவீதம் வரை அந்நிய முதலீடு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "அந்நிய நேரடி முதலீடு உயர்த்தப்படுகிறது. இது இன்னொரு கிழக்கு இந்திய கம்பெனியை உருவாக்கும் என்ற வாதங்களை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது உச்ச வரம்பு மட்டும்தான். இதனை உயர்த்துவதால் அந்நிய முதலீடு உயரும் என அர்த்தமாகாது. பாலிசி வைத்திருப்பவர்களின் நிதி, இந்தியாவிற்குள் மட்டுமே முதலீடு செய்யப்டும்" என தெரிவித்தார்.