தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான நாடுகளில் இது தொடர்பாகக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் ஒமிக்ரான் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமிக்ரான் கரோனா தொற்று இரண்டு பேருக்கு உறுதிசெய்யப்பட்டதாக இன்று மாலை தகவல் வெளியாகியது. கர்நாடகாவைச் சேர்ந்த 65 வயது மற்றும் 45 வயதான ஆண்களுக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட அந்த இருவர் குறித்த தகவல்களை சுகாதாரத்துறை சேகரித்த நிலையில், அந்த இருவருடனும் தொடர்பிலிருந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 5 பேரின் மாதிரிகளும் ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.