கோவிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மூடி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெலாஷ்கர் மஹாதேவ் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமையான பவ்டி என்ற கோவில் கிணறு ஒன்று உள்ளது. நேற்று இந்த கிணற்றின் கூரை(மூடி) சரிந்து விழுந்து திடீரென விபத்து ஏற்பட்டது. கிணற்றிற்குள் 30க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று இரவு வரை 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளன. ராம நவமியை முன்னிட்டு இந்தியாவில் உள்ள ஏராளமான கோவில்களிலும் பக்தர்கள் வழிபாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இந்தூர் கோவிலிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கிணற்றின் கூரை சரிந்து விபத்துக்குள்ளாகி 35 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ''துரதிஷ்டமான சம்பவம் இது. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மற்றவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் மோடியும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில் 'இந்தூர் சம்பவம் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. மாநில முதல்வரிடம் பேசி நிலைமை என்னவென்று அறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளது மத்திய பிரதேச அரசு.
இதேபோல் நேற்று ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா என்ற பகுதியில் உள்ள கோவிலில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது நிழற்பந்தல் தீப்பிடித்து எரிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.