இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட மூத்த தளபதிகள் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 1ஆம் தேதி இரவு இஸ்ரேல் மீது 100 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. அயான் டோம்களை தாண்டி இஸ்ரேல் முழுவதும் 1864 அபாய அலாரங்கள் ஒலிக்கப்பட்டன. தலைநகர் டெல் அவிவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக ஈரான் ஆதரவு க்ஹவுதி படையினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கிடையில், ஈரான் மீதான தாக்குதல் கடந்த முறையைவிடக் கடுமையாக இருக்கும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. அதே சமயம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜோர்டான் நாட்டில் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. அதே சமயம் இந்திய மக்கள் ஈரானுக்கு அத்தியாவசிய பயணம் செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. இத்தகைய சூழலில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதே சமயம் ஈரானுக்கு ரஷ்யா, பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகிக்கின்றன.
இந்த நிலையில், இந்த போர் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘கிழக்கு ஆசியப் பிராந்திய இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரும் திட்டம் இல்லை. போரினால் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியர்களை அழைத்து வரக் கூடிய தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இஸ்ரேல் - ஈரான் மோதல் போராக வெடிக்கக் கூடாது. இரு நாடுகளின் மோதல் கவலை அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.