இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார். கனடா நாட்டு குடிமகனான நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
அவரது குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வேளையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நேற்று (14-10-24) புகார் அளித்தது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இந்தியாவில் உள்ள கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. .
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது, ‘ சஞ்சய் குமார், துருக்கி, சூடான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தூதரக அதிகாரியாக 36 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இந்திய தூதர அதிகாரிகள் மீது அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. கனடாவில் வன்முறை நிலவும் சூழ்நிலையில், இந்திய தூதர அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக முடிவு செய்துள்ளோம் ’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசின் எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் 6 பேர் வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது. அதில், கனடாவின் தூதர்கள் 6 பேரை வரும் அக்டோபர் 19ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் அல்லது அதற்கு முன் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், கனடா மற்றும் இந்தியா இடையே ஏற்கெனவே இருந்த மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.