அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து ஆண்டுதோறும் உலக பட்டினி குறியீட்டு பட்டியலை வெளியிட்டுவருகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டினி குறியீடு தயாரிக்கப்படுகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டிற்கான உலக பட்டினி குறியீட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 116 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில் இந்தியா 101வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 107 நாடுகள் இடம்பெற்றிருந்தபோது இந்தியா 94வது இடத்தில் இருந்தது.
மேலும் இந்தப் பட்டினி குறியீட்டு பட்டியலில், அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் பட்டினி அளவு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இந்தியாவில் கரோனா மற்றும் அதுதொடர்பான கட்டுப்பாடுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தப் பட்டினி குறியீடு தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உலக பட்டினி குறியீட்டு அறிக்கை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த அறிக்கையையும் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில், உலக பட்டினி அறிக்கை 2021 இந்தியாவின் தரத்தைக் குறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உணவு மற்றும் விவசாய அமைப்பின் மதிப்பீட்டில் கள நிலவரமும், உண்மைகளும் இல்லை. மதிப்பீட்டின் செய்முறையிலும் தீவிரமான பிரச்சனைகள் உள்ளன. உலக பட்டினி குறியீட்டின் வெளியீட்டு நிறுவனங்களான கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகள், உண்மைகளை சரி பார்க்கவில்லை.
உணவு மற்றும் விவசாய அமைப்பு பயன்படுத்தும் முறை அறிவியலற்றது. காலப் நிறுவனத்தால் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட 'நான்கு கேள்விகள்' கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் தங்கள் மதிப்பீட்டை செய்துள்ளனர். குறிப்பிட்ட காலகட்டத்தில் தனிநபருக்கு எவ்வளவு உணவு தானியங்கள் கிடைக்கிறது என்பது போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டை அளவிட அறிவியல் ரீதியாக எந்த முறையும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிவியல்ரீதியான அளவீட்டுக்கு எடை மற்றும் உயரத்தை அளவிட வேண்டும். ஆனால் இங்குள்ள செய்முறை என்பது தொலைபேசி மூலமாக மக்கள் தொகையை மதிப்பிட்ட காலப் நிறுவனத்தின் கணிப்பை அடிப்படையாக கொண்டுள்ளது.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.