ஈகிள் இஸ் கம்மிங் (EAGLE IS COMING) எனும் சினிமா பாடலைப் போல் இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் ட்ரோன்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட பருந்துகளின் வீடியோ சோசியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து போதைப் பொருட்களையும் ஆயுதங்களையும் கடத்துவதற்காக ஆளில்லா சிறிய வகை விமானங்களை பாகிஸ்தான் அதிகளவில் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இச்செய்தியால் அதிர்ச்சியடைந்த இந்திய பாதுகாப்பு அமைப்புகள், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் ஒரு முயற்சியாக ஆளில்லா விமானங்களை அடையாளம் கண்டு வீழ்த்துவதற்காக இந்திய ராணுவம் பருந்துகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று உத்தரகாண்ட் மாநிலம் ஆலி பகுதியில் பருந்துகளை வைத்து சோதனை செய்யப்பட்டது. அப்போது இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் பயிற்சித் திறனை நிரூபிக்கும் வகையில் ராணுவ வீரரின் தோளில் உட்கார்ந்து கொண்டிருந்த பருந்து குறிப்பிட்ட இடத்திற்கு வானத்தில் பறந்து சென்று, தான் வைத்திருந்த பொருளை கீழே போட்டது.
இத்தகைய பருந்துகள் ராணுவ அதிகாரிகளின் அறிவுரைப்படி செயல்படும் எனக் கூறப்படுகிறது. இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் ட்ரோன் வகை விமானங்களை வெடிபொருட்கள் கொண்டு சென்று அழிக்கவும், கேமராவை பொருத்தப்பட்டு கண்காணிக்கவும், பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.