தொடர்ந்து நான்கு நாள்களாக ஏற்றத்தில் இருந்த இந்தியப் பங்குச்சந்தைகள், புதன்கிழமை திடீரென்று கரடியின் பிடிக்குள் சிக்கிக் கொண்டன. ஒரே நாளில் தேசிய பங்குசந்தையான நிப்டி 165.70 புள்ளிகளும், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 561.45 புள்ளிகளும் சரிந்தன. அதனால் இன்றும், நாளையும் கையிருப்பில் உள்ள பங்குகளில் ஏற்றம் தென்படும் பட்சத்தில், அவற்றை விற்று கணிசமான லாபம் பார்த்துவிடுவது உகந்தது என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
நிப்டியில் ஏற்றம் கண்ட பங்குகள்:
புதன்கிழமை (ஜூன் 24) காலையில் நிப்டியின் தொடக்கம் (10529.25) நன்றாக இருந்தாலும், நேரம் செல்லச்செல்ல சரிவைச் சந்தித்தன. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 10,553.15 புள்ளிகளும் சென்றது. குறைந்தபட்சமாக 10,281.95 புள்ளிகள் பதிவானது. இறுதியில் 10,305.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிப்டியில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில் நேற்று (ஜூன் 24) வெறும் 10 பங்குகள் மட்டுமே விலை உயர்ந்தன. 39 பங்குகளின் மதிப்பு சரிந்தன. ஒரு பங்கின் விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
என்றாலும், ஏஷியன் பெயிண்ட்ஸ் 3.81 சதவீதம், ஐடிசி 3.38 சதவீதம், ஐஷர் மோட்டார்ஸ் 3.12 சதவீதம், ஹீரோ மோட்டார்ஸ் 2.94 சதவீதம், கெயில் 2.92 சதவீதம் வரை ஆதாயம் அளித்தன. கடந்த நான்கு நாள்களாக வங்கிப் பங்குகள் ஆதாயம் அளித்து வந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., இண்டஸ் இந்த் வங்கி பங்குகளும், பவர் கிரிட், ஹிண்டால்கோ, ஸீ என்டர்டெயிண்மென்ட் பங்குகளும் வீழ்ச்சி கண்டன.
சென்செக்ஸ் நிலவரம்:
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இண்டெக்ஸ் நேற்று முன்தினம் (ஜூன் 23) 3,5430 புள்ளிகளில் முடிந்திருந்த நிலையில், நேற்றும் 35,679.74 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதிகபட்சமாக 35,706 புள்ளிகள் வரை சென்றது. பின்னர் சரியத் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 34,868 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. குறைந்தபட்சமாக 34,794.93 புள்ளிகளுக்கும் சென்றது.
சென்செக்ஸில் எம்.ஆர்.பி.எல். 18.72 சதவீதம், ஹட்சன் 11.17 சதவீதம், செண்ட்ரம் 9.84 சதவீதம், பேஜ் இண்டியா 8.36 சதவீதம், ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கி 7.92 சதவீதம், டிரில் 18.79 சதவீதம் ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் கொடுத்தன. சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள 30 பங்குகளில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் அளித்தன. 23 பங்குகள் பெரும் சரிவை கண்டிருந்தன.
நிபுணர்கள் சொல்வது என்ன?:
பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவு என்பது, ''ஒரு தலைகீழ் அல்லது ஒருங்கிணைப்பு கட்டத்தின் தொடக்கமாக இருக்கலாம்,'' என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். இந்தச் சரிவிலும் ஒரு நல்ல சேதி என்னவெனில், நிப்டி 50- ஐ பொருத்தவரை 10300 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருப்பதுதான். இன்று நிப்டி 10,050 புள்ளிகள் வரை சரியக்கூடும் எனத் தெரிகிறது.
ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வினோத் நாயர், விழாயக்கிழமையும் இந்தியப் பங்குச்சந்தைகள் நிலையற்றதாக இருக்கும். அதனால் முதலீட்டாளர்கள் கூடுமான வரை பங்குகளில் ஏற்றம் இருப்பின், அவற்றை விற்று லாபம் பார்த்துவிடுவது நல்லது என்கிறார்.
கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சஹாஜ் அகர்வால், ''பரந்த சந்தை, பலவீனத்தின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் குறிக்கிறது. இது லாப முன்பதிவு அல்லது ஒருங்கிணைப்புக்கான வாய்ப்பைக் குறிக்கிறது.
குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு இந்தச் சரிவு நல்ல சமிக்ஞை கிடையாது. ஆனால், நடுத்தர கால ஆதாயத்தின்பேரில் பங்குகளை வாங்கி வைத்திருப்போருக்கு, குறிப்பாக ஆட்டோமொபைல், உலோக பங்குகளில் முதலீடு செய்திருப்போருக்கு அடுத்து வரும் காலங்களில் கணிசமான ஆதாயம் கிடைக்கலாம்,'' என்கிறார்.
ரேலிகர் பங்குத்தரகு நிறுவனத்தின் ஆய்வாளர் அஜித் மிஸ்ரா, ''நிப்டியின் இயக்கம் எதிர்பார்த்த திசையில்தான் இருக்கிறது. இப்போது அடுத்த திசை நகர்வுக்கு முன்னர் அது சில ஒருங்கிணைப்புகளைக் காணலாம். உள்நாட்டுச் சந்தையில் எந்த ஒரு பெரிய நிகழ்வும் இல்லாத நிலையில், பங்கேற்பாளர்கள் உலகளாவிய சந்தைகளின் போக்கை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்,'' என்றார்.
புரட்டி எடுத்த உலகச்சந்தைகள்:
வால் ஸ்ட்ரீட் மார்க்கெட் எனப்படும் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை, தலால் ஸ்ட்ரீட்டிலும் (இந்தியச் சந்தைகள்) எதிரொலித்தது. அமெரிக்காவில் கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலையால் நாஸ்டாக் 1.09 சதவீதம் வரை சரிவடைந்தது. அதேபோல் ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் புதன்கிழமை சரிவடைந்தன. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட சந்தைகளில் சராசரியாக 1.50 சதவீதம் வரை பங்குச்சந்தைகள் சரிந்தன.
தொழில்நுட்ப வல்லுநர்கள் சொல்வது என்ன?:
கடந்த சில நாள்களாக தொடர்ந்து காளையின் ஆதிக்கத்தில் இருந்த நிப்டியின் தினசரி அட்டவணையில் நேற்று மாறுதல் ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் அருண்குமார், ''காளையின் ஆதிக்கம் தொடர்ச்சியாக இருந்தால், அதே அளவு கரடியின் தாக்கமும் இருக்கும் அல்லது சில ஒருங்கிணைப்புகள் இருக்கும் என்பதெல்லாம் பங்குச்சந்தைகளில் எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். ஜூன் காலாண்டின் கணக்குகளை முடிக்க வேண்டும் என்பதால், இன்று (வியாழக்கிழமை) தேசிய பங்குச்சந்தையில் மேலும் சரிவு ஏற்படலாம். அதாவது, 10,050 புள்ளிகள் வரை சந்தையில் இறக்கம் தென்படும்,'' என்கிறார்.
நிப்டியின் புதிய வரம்பு நிர்ணயம்:
தேசிய பங்குச்சந்தை இன்றும், நாளையும் 10,100 முதல் 10,150 புள்ளிகள் வரை சரியக்கூடும். வரும் மாதத்தில் 10,500 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
காளையின் அறிகுறிகள் உள்ள பங்குகள்:
சந்தைச் சரிவில் இருந்தாலும் முந்தைய காலாண்டு முடிவுகளின்படி சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் அளிக்கும் எனத்தெரிகிறது.
ஐ.எப்.சி.ஐ., எல் அண்டு டி, டாபர் இண்டியா, ஐ.ஓ.எல். கெமிக்கல்ஸ், ஜூபிலன்ட் புட் ஒர்க்ஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், காலண்ட் இஸ்பேட், காட்ப்ரே பிலிப்ஸ், கிளாரியன்ட் கெமிக்கல்ஸ், கெம்பேப் ஆல்கலைஸ், கோத்தாரி பெட்ரோகெம், அட்லாண்டா, இண்டியா மார்ட் இண்டர்மெஷ், எலக்ட்ரோதெர்ம், விபுல், அனிக் இண்டஸ்ட்ரீஸ் மற்றும டிடிகே பிரெஸ்டீஜ் ஆகிய பங்குகள் இன்றும் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்குகள்:
முதலீட்டாளர்கள் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், இன்பிபீம் அவென்யூஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ரேலீஸ் இண்டியா மற்றும் எஸ்கார்ட்ஸ் ஆகிய பங்குகளை போட்டிப்போட்டு வாங்கி வருகின்றனர். அதே நிலை இன்றும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கரடியின் பிடியில்...
ஒட்டுமொத்த அளவில் இந்தியப் பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலும் கரடியின் ஆதிக்கம் தொடரும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள். ஏனெனில், நேற்றைய வர்த்தக நேர முடிவில் பிஎஸ் 500-இல், 358 பங்குகள் சரிவடைந்தன. 140 பங்குகள் மட்டுமே ஓரளவு ஆதாயம் அளித்தன. அதன் செண்டிமென்ட்தான் இன்றும், நாளையும் தொடரும் என்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள்.