இந்தியாவில் மக்கள் பட்டினி வேலையின்மை மற்றும் தீண்டாமை ஆகியவற்றைை எதிர்கொள்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டி ஏழை மக்கள் அதிகம் வாழும் பணக்கார நாடு இந்தியா என தெரிவித்தார். அதோடு நாட்டில் மக்கள் வறுமை, பட்டினி, வேலையின்மை, பணவீக்கம், சாதிப்பாகுபாடு, தீண்டாமை ஆகியவற்றை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் நாட்டில் 124 மாவட்டங்களில் அடிப்படை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வசதிகள் இல்லாததால் மக்கள் அதிக அளவில் நகரங்களுக்கு குடி புகுவதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவர் பேசிய இந்த காணொளி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுவதா என எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்த அவர், “நாம் இத்தகைய சமூக பிரச்சனைகளை கலைந்து மிக வேகமாக முன்னேற வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய ஒட்டு மொத்த பேச்சின் சாராம்சமும். இதில் தவறு ஒன்றும் இல்லை. இதை சிலர் திரித்து சர்ச்சை ஆக்கி ஆனந்தம் கொள்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.