இந்தியாவில் தற்போதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்குப் பரவலாக செலுத்தப்படுகின்றன. ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. இத்தடுப்பூசிகளைத் தவிர மாடர்னா தடுப்பூசிக்கும், கடந்த ஏழாம் தேதி ஜான்சன் & ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கும் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஸைடஸ் காடிலா என்ற இந்திய நிறுவனம், ‘ஸைகோவி - டி’ என்ற கரோனா தடுப்பூசியைத் தயாரித்து, அவசரகால அனுமதி கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்தது. சில நாட்களுக்கு முன்பு இத்தடுப்பூசியின் சோதனை தரவுகளை ஆய்வுசெய்த நிபுணர்கள், தடுப்பூசி பரிசோதனை தொடர்பான கூடுதல் தரவை சமர்ப்பிக்குமாறு ஸைடஸ் காடிலா நிறுவனத்தை அறிவுறுத்தினர்.
இந்தநிலையில், ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்த வாரத்தில் அவசரகால அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் இந்த ஸைகோவி - டி தடுப்பூசி, மொத்தம் மூன்று டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் செலுத்தப்பட்ட 28வது நாளில் இரண்டாவது டோஸையும், 56வது நாளில் மூன்றாவது டோஸையும் செலுத்திக்கொள்ளலாம். டி.என்.ஏ பிளாஸ்மிட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கரோனா தடுப்பூசி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்குப் பாதுகாப்பானது என ஸைடஸ் காடிலா நிறுவனம் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.