இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக மூன்று லட்சத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து, 209 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 627 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 443 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் தினசரி கரோனா உறுதியாகும் சதவீதம் 15.88 சதவீதமாக இருந்து வருகிறது. இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கரோனா சூழல் குறித்து தென்னிந்திய மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இன்று நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, லட்சத்தீவு, தெலுங்கானா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.