Skip to main content

பேச்சுவார்த்தையில் பிடிவாதம் பிடித்த சீனா - எல்லை பிரச்சனையை தீர்ப்பதில் சிக்கல்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

india china

 

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டு, அவை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இந்தநிலையில், இந்தியா - சீனா இடையிலான 13வது கட்ட பேச்சுவார்த்தை, உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் மால்டோ என்னும் இடத்தில் நேற்று (10.10.2021) காலை 10.30 மணிக்குத் தொடங்கி இரவு ஏழு மணிவரை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் மூன்று இடங்களில் படைகளை விலக்குவது குறித்து நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் சீன தரப்பின் பிடிவாதத்தால் எல்லை பிரச்சனையைத் தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவும் தற்போதைய நிலைமை, சீனா ஒரு தலைபட்சமாக சூழ்நிலையை மாற்ற முயன்றதாலும், அது இருதரப்பு ஒப்பந்தங்களை மீறியதாலும் ஏற்பட்டது. எனவே மேற்குப் பகுதியில் அமைதியை மீட்டெடுக்க மீதமுள்ள பகுதிகளில் (படைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளில்) சீன தரப்பு உரிய நடவடிக்கை எடுப்பது முக்கியம் என பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது" என தெரிவித்துள்ளது.

 

"மீதமுள்ள பகுதிகளில் தீர்வு எட்டப்படுவது இருதரப்பு உறவுகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்" என பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டதாக அறிக்கையில் கூறியுள்ள இந்திய இராணுவம், "மீதமுள்ள பகுதிகளில் தீர்வை எட்டுவதற்கு இந்திய தரப்பு ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை செய்தது. ஆனால் சீன தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சந்திப்பில் மீதமுள்ள பகுதிகளுக்குத் தீர்வு எட்டப்படவில்லை" எனவும் கூறியுள்ளது.

 

மேலும், "இரு தரப்பினரும் தகவல்தொடர்புகளைப் பராமரிக்கவும், களத்தில் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கவும் ஒப்புக்கொண்டனர். இரு தரப்பு உறவின் பல்வேறு கோணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இருதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, மீதமுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க சீனா பணியாற்றும் என நாம் எதிர்பார்க்கிறோம்" எனவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து சீனா இராணுவத்தைச் சேர்ந்த வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் (western theater command) செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா நியாயமற்ற, நடைமுறைப்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி, பேச்சுவார்த்தையைக் கடினமாக்குகிறது" என்றும், "நிலைமையைத் தவறாக மதிப்பிடுவதற்குப் பதிலாக, இந்திய - சீன எல்லையில் போராடி அமல்படுத்தப்பட்ட சூழ்நிலையை இந்திய தரப்பு எண்ணிப் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

 

இருதரப்பும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், எல்லை பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.