கடந்த ஆண்டு இந்தியாவின் லடாக் எல்லையில், சீன இராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய - சீன இராணுவங்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும், எல்லைப் பகுதியில் படைகளைக் குவிந்துள்ளன.
எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, இந்தியா-சீனா நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே நேற்று (24.01.2021) 9ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கிடையே, சிக்கிம் எல்லையில் சீனா இராணுவம் ஊடுருவ முயன்றதாகவும், அதனை இந்திய இராணுவம் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இதில் 20 சீன வீரர்களும், 4 இந்திய வீரர்களும் காயமடைந்தாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், எல்லையில் மோதல் நடந்ததை இந்திய இராணுவம் உறுதி செய்துள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி சிக்கிமில் உள்ள நாகு லாவில் இந்திய இராணுவம் மற்றும் சீன இராணுவத்துக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் ஏற்கனவே நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படி, அங்கு பணியில் இருந்த இராணுவத்தினராலேயே தீர்க்கப்பட்டது என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.