2018ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் பயன்பாட்டை தடை செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது. அதன்தொடர்ச்சியாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில் இந்தியர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டிவருகின்றனர்.
தற்போதுவரை 105 மில்லியன் இந்தியர்கள், அதாவது இந்திய மக்கள் தொகையில் 7.9 சதவீதம் பேர் இந்திய பணப்பரிமாற்றம் மூலமாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளனர். இந்தநிலையில், மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் கிரிப்டோகரன்சி தீவிரமான கவலையாக உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், கிரிப்டோகரன்சி குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை செய்துள்ளதாகவும், அதனை மத்திய அரசு பரிசீலித்துவருவதாகவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, கிரிப்டோகரன்சி குறித்து அத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்தொடர்ச்சியாக கடந்த திங்கட்கிழமை (15.11.2021) நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, தொழில் சங்கங்கள் மற்றும் நிபுணர்களுடன் கிரிப்டோகரன்சி குறித்து ஆலோசித்தது.
இந்தச் சூழலில் விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர்களில் ஒருவரான கிரிஷ் பரத்வாஜ், கிரிப்டோகரன்சியைத் தடை செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், அந்தக் கடிதத்திற்கு நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில், விர்ச்சுவல் கரன்சிகள் (விசி) தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழு, அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளும் தடை செய்யப்பட வேண்டும் எனவும் அரசு சொந்தமாக கிரிப்டோகரன்சி வெளியிட தயாராக இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு இந்த பரிந்துரைகள் மேல் முடிவெடுக்கும் என்றும், இதுதொடர்பாக சட்ட முன்மொழிவு தயார் செய்யப்பட்டால் அது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதாவை வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதன்மூலம் தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தக் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யும் முன் மூன்று முதல் ஆறுமாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.