பசிபிக் பெருங்கடலையொட்டி உள்ள டோங்கோ நாட்டில் கடந்த 14 ஆம் தேதி ஹூங்கோ டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியிலிருந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இது சுனாமி ஏற்படவும் வழி வகுத்தது. இந்த எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியினால் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
நீரில் எரிமலை சாம்பல் கலந்துள்ளதால், குடிதண்ணீர் கிடைப்பது கூட கடினமாகியுள்ளது. தகவல் தொடர்பு வசதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டோங்கோ நாட்டிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் இந்தியா,டோங்கோவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. 2 லட்சம் அமெரிக்க டாலர் உடனடி நிவாரண உதவி டோங்கோ நாட்டிற்கு வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் ஏற்பட்ட சேதத்திற்காக டோங்கோ அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.