74 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தவுள்ளார். இவ்விழாவில் பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்படும். இதையடுத்து நாட்டின் பன்முக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெறவுள்ளன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி(68) தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதனால் எகிப்திய ஆயுதப்படையின் 144 வீரர்கள் இந்திய வீரர்களுடன் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.