உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை, லக்கிம்பூர் வழக்கு விசாரணையைக் கண்காணிப்பாளராக நியமித்து உத்தரவிட்டது. மேலும், வன்முறை குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவில் மூன்று மூத்த அதிகாரிகளையும் சேர்த்து உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு விசாரணைக் குழு, லக்கிம்பூர் மாவட்ட நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது அலட்சியத்தால் நிகழ்ந்தது அல்ல என்றும், அந்த சம்பவத்தின் பின்னால் திட்டமிடப்பட்ட சதி இருந்ததாகவும் கூறியுள்ள சிறப்பு விசாரணை குழு, கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் எனவும், அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஏற்கனவே பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.