ஒடிசா மாநிலம் சுந்தர்காஹ் மாவட்டத்தில் உள்ள ஜித்ராபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் டெபன் குமார் பெஹ்ரா(35). இவருக்கு திருமணமாகி ஷம்யமாகி பெஹ்ரா என்ற மனைவி இருந்தார். இந்த நிலையில், ஷம்யமாகி பெஹ்ரா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்து கிடந்த ஷம்யமாகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து ஷம்யமாகியின் கணவர் டெபன் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மர்மநபர்கள் சிலர் கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்கு வந்ததாகவும், மனைவியின் நகைகளை பறிக்க முயன்ற போது அவர்கள் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாகவும் டெபன் குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.
டெபன் குமார் போலீசாரிடம் கூறிய வாக்குமூலம், பிரேத பரிசோதனை அறிக்கையோடும், தடயத்தோடும் ஒத்துப்போகவில்லை என்பது போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில், டெபன் குமாரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மனைவி ஷம்யமாகியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். டெபன் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த ஷம்யமாகி, கணவரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த டெபன் குமார், தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, கொலை நடந்த நிகழ்வையும், ஆயுதத்தையும் டெபன் குமாரின் மைத்துனர் சத்ய நாராயணன் மறைத்து வைத்து இந்த கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, டெபன் குமார் மற்றும் சத்ய நாராயணன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மனைவியைக் கொன்று போலீசாரிடம் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.