ராஜஸ்தான் மாவட்டம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர் வால்மீகி. இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் ராமேஸ்வர் வால்மீகி மதுபானம் வாங்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மதுபான மாஃபியா கும்பல், வால்மீகியை அடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த 14ஆம் தேதி ராமேஸ்வர் வால்மீகி தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்ட அந்தக் கும்பல், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீடியோவில், ராமேஸ்வரின் கை, கால்களை கயிற்றால் கட்டி வைத்து பெரிய கம்பை கொண்டு அடிக்கின்றனர். மேலும், அவரை தலைக்கீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்குதல் நடத்துகின்றனர் என்பதோடு வீடியோ முடிவடைகிறது. கொடூரத் தாக்குதலுக்கு ஆளான ராமேஸ்வர், மயக்கமடைந்ததை அடுத்து ஹரியானவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய தீபக் சிங், சுபாஷ், சதீஷ், பிரவீன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறியதாவது, “மோடி-பஜன்லால் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் உண்மை. பட்டியலினத்தவர்களின் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவும், அவர்களை அடிக்கவும், கொலை செய்யவும் 400 இடங்களை பா.ஜ.க விரும்புகிறது. பா.ஜ.க எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் பட்டியலினத்தவர்கள் மீது சித்திரவதைகள் நடக்கின்றன. இதயத்தை உலுக்கும் இந்தச் சம்பவம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் இருந்து வருகிறது. ராமேஷ்வர் வால்மீகி என்ற பட்டியலின இளைஞர் எவ்வளவு இரக்கமின்றி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார் என்று பாருங்கள்” என்று தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.
मोदी-भजन लाल की डबल इंजन सरकार का सच।
दलितों का आरक्षण ख़त्म करने, उनको पीटने और उनकी हत्या करने के लिए BJP को चाहिए 400 सीट।
जहाँ भाजपा है वहाँ दलित पर अत्याचार है।
ये दिल दहला देने वाली घटना राजस्थान के झुनझुनूँ की है देखिए किस बेरहमी से एक दलित युवक रामेश्वर बाल्मीकि को… pic.twitter.com/WMTMNmXmNf— Sanjay Singh AAP (@SanjayAzadSln) May 22, 2024