குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சடாசனா பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் சவ்தா. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால், நேற்று (14-02-24) மணமகனின் திருமண ஊர்வலம் நடைபெற்றது.
அந்த திருமண ஊர்வலத்தின் ஒரு பகுதியாக மணமகனான விகாஸ் சவ்தாவை மணமகன் கோலத்தில் குதிரையில் ஏற்றி, அவருடைய உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், குதிரையில் அமர்ந்திருந்த விகாஸின் சாதிப் பெயரை சொல்லி இழிவுப்படுத்தி அவரை தாக்கியுள்ளார். அங்கு வந்த 4 பேரும் விகாஸ் சவ்தாவை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விகாஸ் சவ்தா படுகாயமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மணமகனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரில், ‘திருமண ஊர்வலம் நடைபெற்ற போது, குதிரையில் அமர்ந்திருந்த மணமகனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள், ‘எங்கள் சாதியினர் மட்டுமே குதிரை ஓட்ட முடியும். நீங்கள் குதிரையில் ஏறவே கூடாது’ என்று சொல்லி அவர்கள் மணமகனை தாக்கி காரில் ஏறிச் செல்ல வற்புறுத்தினார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் அளிந்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சைலேஷ் தாக்கோர், ஜெயேஷ் தாக்கோர், சுமிர் தாக்கோர், அஸ்வின் தாக்கோர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.