உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது பட்டியலின சிறுமி. இந்த சிறுமியின் தந்தை கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, சிறுமியினுடைய தந்தை வழக்கம் போல் பணிக்காக வெளியூர் சென்றிருந்தார். சிறுமியினுடைய தாயார் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சிறுமி குப்பை கொட்ட வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு, கிராமத்திற்கு வெளியே தகனம் செய்யும் மைதானத்திற்கு அருகில் உள்ள சாலையில் தூக்கி எறிந்துவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. காரில் இருந்த அடையாள அட்டையில் குற்றவாளியின் பெயர் இருந்ததை கண்ட சிறுமி, போலீசிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில், ரஷீத் என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.