பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.