தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் தருவதாக மணப்பெண் கூட்டிச்சென்று கழுத்தை அறுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அகனம்பள்ளியை சேர்ந்த சேர்ந்தவர் புஷ்பா. ஆராய்ச்சி மாணவியான இவருக்கு அதேபகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற இளைஞரை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். மே 20ஆம் தேதி திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அதற்கான வேலைகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் திருமண பேச்சு தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே இந்த திருமணத்தில் எனக்கு சம்மதம் இல்லை என புஷ்பா கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர்கள் வற்புறுத்தி மணமகளை திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்ததாக கூறப்படுகிறது.
மாப்பிள்ளையான ராமகிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருந்த நிலையில், திருமண வேலைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது ராமகிருஷ்ணாவை தொடர்புகொண்ட இளம்பெண் புஷ்பா, உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருகிறேன் எனக்கூறி மலைப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் புஷ்பாவும் ராமகிருஷ்ணனும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபொழுது துப்பட்டாவை எடுத்து ராமகிருஷ்ணனின் கண்ணைக் கட்டி கை பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமகிருஷ்ணனை தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமகிருஷ்ணன் அலறியதைக் கண்டு பதறிய புஷ்பா அவரது ஸ்கூட்டிலேயே ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அப்பொழுது மருத்துவர்கள் என்ன நிகழ்ந்தது எனக் கேட்ட பொழுது மலையிலிருந்து கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக புஷ்பா மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் கழுத்தில் வெட்டு காயங்கள் இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு புகாரளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணப்பெண் புஷ்பாவிடம் நடத்திய விசாரணையில் சர்ப்ரைஸ் தருவதாகச் சொல்லி மணமகனாக நிச்சயிக்கப்பட்டிருந்தவரை கூட்டிச் சென்று குத்திக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.