உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
தென் மாநிலமான கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரானைட் கற்களும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணலைக் கொண்டு கோவிலின் அடித்தள அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானத்தில் துளி அளவு கூட இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணமாகப் பொதுவாக இரும்பின் ஆயுட்காலம் 90 ஆண்டுகள் மட்டுமே; ஆனால் ராமர் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் எந்த வித இயற்கை பேரிடர்களிலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக உருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கட்டுமானத்தில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கட்டுமானத்தில் சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்தாமல் கற்களோடு கற்களை இணைக்கும் இண்டர்லாக் முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 3 தளங்கள், 161 அடி உயர கோபுரத்துடன் கட்ட திட்டமிடப்பட்ட ராமர் கோவிலின் 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறவுள்ளது. பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவால் அயோத்தி நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. ராமர் கோயில் வண்ண பூக்களினாலும், மின் விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மதியம் 12.05 மணி முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக அயோத்தி நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.