அண்மையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு பேரிடரில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். முண்டக்கை, சூரல்மலை, மேல்பாடி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதோடு பல மக்கள் உறவுகளையும் உடைமைகளையும் இழந்தனர். தற்போது வயநாடு படிப்படியாக மீண்டு வருகிறது.
இதுகுறித்து தானாக முன்வந்து கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் எதிர்காலங்களில் இதுபோன்ற பேரிடர் விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்கு ஆய்வு செய்வதற்கான குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது கேரள உயர்நீதிமன்றம்.
மூத்த வழக்கறிஞர் ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு தாக்கல் செய்துள்ள ஆய்வு அறிக்கையில் 'போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. 2019 ஆம் ஆண்டே வயநாட்டில் 29 கிராமங்களுக்கு நிலச்சரிவு அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டது. பெருமழை பெய்த நிலையிலும் மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் இருந்த மக்களை அப்புறப்படுத்தாததே அதிக உயிரிழப்புக்கு காரணம். அதேபோல் மழையின் அளவைத் துல்லியமாக்கக் கணிக்கும் தொழில்நுட்பக் கருவிகளும் இல்லாதது மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. எனவே வயநாடு மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் அதீனவீன மழை மானிகளை நிறுவ வேண்டும்' என அந்தக் குழு தங்கள் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.