Skip to main content

புதிய சட்டங்களுக்கு இந்தி பெயர் திணிப்பு?; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Published on 06/12/2024 | Edited on 06/12/2024
Imposition of Hindi names for new laws at Debate in Parliament

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் புதிய மசோத்தாக்களுக்கு இந்தி மொழியை மத்திய அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 90 ஆண்டுகள் பழமையான விமானச் சட்டத்துக்குப் பதிலாக, ‘பாரதிய வாயுயான் விதேயக்’, 2024 என்ற மசோதாவுக்கு இந்தி பெயர் சூட்டப்பட்டி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு புதிய சட்டம் நேற்று (05-12-24) நிறைவேற்றப்பட்டது. 
இந்த புதிய சட்டம் குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகாரிகா கோஷ், “ஏன் பல சட்டங்களுக்கு இந்தி பெயர்கள்? இது இந்தி திணிப்பு.2024 ஆம் ஆண்டு மக்களின் ஆணையானது பன்முகத்தன்மை, ஈவுத்தொகை மற்றும் கூட்டாட்சி கொள்கைக்காக இருந்தது. ஆனால் அரசாங்கம் சட்டங்களை   ‘ஹிண்டிஃபிகேஷன்’ செய்வதில் பிடிவாதமாக உள்ளது. இது இந்தி திணிப்பு” என்று கூறினார்.

இதனையடுத்து, தி.மு.க எம்.பிக்கள் கனிம்ழொ, என்.வி.என்.சோமு ஆகியோர், சட்டத்தின் பெயரை மாற்றக் கோரி கடும் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து பேசிய கனிமொழி எம்.பி, “இந்தி பேசாதவர்கள் மீது இந்தியைத் திணிக்க முயற்சிக்காதீர்கள். மசோதாவுக்கு இந்தி பெயர் சூட்டுவது தொடர்பான முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க பதிலடி கொடுத்தது. 

எதிர்க்கட்சிகளின் வாதங்களை மறுத்த பா.ஜ.க தலைவர் கன்ஷியாம் திவாரி கூறியதாவது, “இந்தி மொழியில் தலைப்பிடப்பட்ட மசோதாவை, தெலுங்கு பேசும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு அறிமுகப்படுத்தினார். இந்தி மொழியில் மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்தது அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகள் காலனித்துவ கால மனநிலையை பிரதிபலிக்கின்றன” என்று கூறினார். இப்படியாக அந்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை இந்தி மொழியில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்