இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்தது.
இதனிடையே அக்னிபத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அண்மையில் துவங்கியது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அக்னிபத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பாரமுல்லா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பயிற்சிகள் தொடங்கியது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேர்த்துவிடுவதாக ராணுவ வீரர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்ற ராணுவ வீரர் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அக்னி திட்டத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி முன்பணமாக 2.5 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இந்த புகாரை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்பே ராணுவத்தில் இளைஞர்களை சேர்த்து விடுவதாக 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் நரேஷ் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.