சமீபத்தில் திரைக்கு வந்த பாலிவுட் திரைப்படம் ‘பேட்மேன்’, நம் தமிழ்மகன் அருணாச்சலம் முருகானந்தத்தின் ஒப்பற்ற முயற்சியைப் பாராட்டும் விதமாக உருவாக்கப்பட்டது.
சானிட்டரி நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்க இயந்திரத்தை உருவாக்கி, அதை கார்ப்பரேட்டுகளின் கையில் சிக்காமல் எளிய மக்களின் பயன்பாட்டிற்கு போகவேண்டும் என இன்றும் உழைத்துக்கொண்டிருக்கும் அவர், படித்த இளைஞர்கள் சமூகத்திற்காக உழைக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஆங்கில இதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில், ‘படிக்காத என்னால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியுமென்றால், படித்தவர்களால் இன்னும் அதிகமாக அதைச் செய்யமுடியும். தற்கால இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக அலைந்து திரியாமல், சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றிற்கு தங்கள் படிப்பின் மூலமாக தீர்வுகாண முயலவேண்டும். மேலும், பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் குறித்து பேச உலக மாதவிடாய் தினத்திற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. இங்கு எல்லா நாட்களுமே அதற்கு உகந்தவைதான். இன்று காதலர் தினம்.. அதனால் எல்லா ஆண்களும் அவரவர் பெண்களிடம் மாதவிடாய் சுகாதாரம் பற்றிப்பேசி அவர்களது நாளை சிறப்பாக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.