![If the central government has an iota of conscience left it should tell the country what happened in Manipur Mallikarjuna Kharge](http://image.nakkheeran.in/cdn/farfuture/adq6fmiyL-3PqvIojK5m5TSWo7mAlYKTWLGQePi68ZQ/1689830319/sites/default/files/inline-images/manipur-video_0.jpg)
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்திருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார். இருப்பினும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வன்முறை, கலவரங்கள் ஏற்பட்டு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். இது சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் கொலை கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தீவிரமாக தேடி வருவதாக அம்மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று கூட உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
![If the central government has an iota of conscience left it should tell the country what happened in Manipur Mallikarjuna Kharge](http://image.nakkheeran.in/cdn/farfuture/A5ZN45pqD2yewSor7rTdCOumqgAosy-xJc_zBUXs5mw/1689830334/sites/default/files/inline-images/mallikarjuna-kharjey.jpg)
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடியையும், பாஜகவை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது. ஆனால், மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா. மோடி அரசும், பா.ஜ.க.வும், ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் கும்பல் ஆதிக்கமாக மாற்றி, அரசின் நுட்பமான சமூகக் கட்டமைப்பை அழித்து வருகிறது. உங்கள் அரசாங்கத்திற்கு மனசாட்சி ஒரு சிறு துளி மீதம் இருந்தால். நீங்கள் மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி, மத்தியிலும், மாநிலத்திலும் உங்கள் இயலாமைக்கு மற்றவர்களைக் குற்றம் சொல்லாமல் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு எடுத்துரைக்க வேண்டும். நீங்கள் உங்கள் அரசியலமைப்பு பொறுப்பைக் கைவிட்டுவிட்டீர்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் மணிப்பூர் மக்களுடன் நாங்கள் ஒன்றாக நிற்கிறோம். நாடாளுமன்றத்தில் இன்று மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ் எழுப்பும்" எனத் தெரிவித்துள்ளார்.