கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நிரம்பிய இடுக்கி அணையிலிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் ஒன்று மலையும், மலை சார்ந்த இடமுமான இடுக்கி மாவட்டம். இங்குப் பெரியாற்றின் குறுக்கே இரு மலைகளுக்கு இடையே அமைக்கப்பட்டது தான் இடுக்கி அணை. இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 2,403 அடி நீர்மட்டம் கொண்டது. நாட்டின் மிகப்பெரிய ஆர்ச் வடிவ அணையும் இது தான். 1969- ஆம் ஆண்டு கட்ட தொடங்கி, 1973- ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. வழக்கமாகப் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்காக அணைகள் கட்டப்படும். ஆனால், பெரியாற்றில் பெருக்கெடுக்கும் நீரைத் தேக்கி நீர் மின்நிலையங்கள் மூலம் மின் தட்டுப்பாட்டைப் போக்கக் கட்டப்பட்டது தான் இடுக்கி அணை.
75 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை, கேரள மாநில மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணையின் பின்புறத்தில் உள்ள செறு தோணி அணையின் மூலம் வெளியேற்றப்படும் நீரால், செறு தோணி, குளமாவு, மூலமௌற்றம் ஆகிய மூன்று நீர்மின் நிலையங்களில் அதிகபட்சமாக 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இத்தனை பிரம்மாண்ட அணை கட்டப்பட்டு 48 ஆண்டுகள் ஆனாலும் 1981, 1992, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டுமே நீர் நிறைந்து திறக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக தற்போது இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. மூன்று மதகுகள் மூலம் ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது எர்ணாகுளம் மாவட்டம் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.